கடலூர் மாவட்டத்தில் பெண்கள் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி நிர்வாகத்தில் அவர்களது கணவர்கள் உறவினர்கள் தலையீடு இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளில் பெண்கள் வெற்றி பெற்று பதவியேற்றுள்ளனர். ஊராட்சி நடவடிக்கைகளில் தலைவர்கள் மற்றும் துணை தலைவர் பதவிகளில் உள்ள பெண்களின் கணவர்கள், உறவினர்கள் தலையீடு அதிகம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளது. அதையடுத்து நிர்வாகத்தில் கணவர்களின் தலையீடு இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்திற்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் மூலம் மேற்படி சுற்றறிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் கடமைகளும் பொறுப்புகளும் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களையே சேரும்.
ஊராட்சி சட்டத்தின்படி ஊராட்சி நிர்வாகத்தின் அனைத்து பொருப்புகளுக்கும் அவரே பொறுப்பாளர் ஆவார் என்பதால் அவருக்கு அரசு முழு பொறுப்பையும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளது. ஊராட்சி நிர்வாகப் பணிகளில் ஊராட்சி தலைவரின் கணவர் மற்றும் உறவினர்களுடைய தலையீடுகள் இருக்கக்கூடாது. தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர்கள் மட்டுமே ஊராட்சி நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். விதிகளை மீறி செயல்படும் ஊராட்சி தலைவர்களின் கணவர் மற்றும் உறவினர்கள் மீது ஊரக உள்ளாட்சி சட்டத்தை மீறுவதாக கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பார்கள். ஆனால் அவர்களை வீட்டிலேயே முடக்கிவைத்து விட்டு அவர்களது கணவர்கள், உறவினர்கள் அனைத்து அலுவலகங்களுக்கும் சென்று தாங்கள் தான் தலைவர் என்று அதிகாரிகளிடம் கூறிக்கொள்வது, பொதுமக்களிடமும் இவர்களே தலைவர் போன்று அதிகாரம் செய்வது, அரசு திட்ட பணிகளை முன்னின்று செயல்படுத்துவது, மேலும் ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் இவர்களே முன்னின்று நடத்துவது, வெற்றி பெற்ற பெண் பிரதிநிதிகளை ரப்பர் ஸ்டாம்ப் போல கையெழுத்துப் போட மட்டும் பயன்படுத்துவது பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் மேற்க்கண்டவாறு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. இதன் பிறகாவது உள்ளாட்சிகளில் வெற்றி பெற்ற பெண் பிரதிநிதிகள் சுயமாக செயல்படுவார்களா? அப்படி செயல்பட விடுவார்களா? என்பது இனிமேல்தான் தெரியவரும் என்கிறார்கள் இவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள்.