சிதம்பரம் அருகே சின்னகாரமேடு, பெரியகாரமேடு, வீரன்கோவில் திட்டு ஆகிய கிராமப் பகுதிகளைக் கொண்டது கீழத்திருக்கழிபாலை ஊராட்சி. இதில் துணைத்தலைவராக உள்ளவர் லட்சுமணன்.
இவர் வெள்ளிக்கிழமையன்று வீரன்கோவில் திட்டிலுள்ள, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அவரது ஆதரவாளர்களுடன் ஊராட்சி நிர்வாகச் செயல்பாட்டைக் கண்டித்தும், ஊராட்சி அலுவலகம் முறையாக திறக்கப்படாதது மற்றும் அலுவலகத்திற்கு சரிவர வராத ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்தும் தர்ணா போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.
மேலும், இந்தப் போராட்டத்தில், குடிநீர்ப் பிரச்சனை, வீட்டு வரிக்கு ரசீது கொடுக்காதது உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து, 30 நிமிடம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சுபாதினி விமல்ராஜிடம் கேட்டபோது, "இந்தமுறை இடஒதுக்கீடு அடிப்படையில், ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த என்னை மக்கள் தலைவராகத் தேர்வு செய்துள்ளனர். மிகவும் பிற்பட்ட சமூகமான லட்சுமணன், அவருக்குச் சாதகமானவரை தேர்தலில் நிற்க வைத்தார். அவர் தோல்வியுற்றார். பின்னர் இவர் துணைத் தலைவராக தேர்வு பெற்றார். அதிலிருந்து காழ்ப்புணர்ச்சி மற்றும் சாதிய எண்ணத்துடன் நடந்துகொள்கிறார். அவர் சொல்கிற அனைத்துக் குற்றங்களும் தவறானது.
ஊராட்சி நிர்வாகத்தை தான்தான் நடத்துவேன் என்கிறார். மேலும் அவரின் உறவினர்கள் மற்றும் வேண்டியவர்களைப் பணியாளராகப் போடவேண்டும் என்று பிரச்சனை செய்கிறார். ஒவ்வொரு கையெழுத்திற்கும் கமிஷன் கேட்கிறார். அப்படி இல்லையென்றால், 'நீங்க செய்த பணிகளை, நான் ஆய்வு செய்துவிட்டுத்தான் கையெழுத்துப் போடுவேன். உங்க இஷ்டத்துக்குப் போடமுடியாது என்றதுடன், அவர் குடியிருக்கும் விரன்கோவில்திட்டு பகுதியில் உள்ளவர்களுக்கு, அவர்தான் எல்லாத்தையும் செய்யவேண்டும். தலைவர் வரக்கூடாது' என்கிறார்.
தற்போது ஒரு ஊராட்சியில் 10 குடும்பங்களுக்கு கோழி கொடுக்கும் திட்டத்தில் வீரன்கோவில்திட்டு பகுதியில் உள்ள 7 குடும்பங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று பிரச்சனை செய்கிறார். இவர் இப்படிச் செய்தால் மீதியுள்ள, ஊர்களில் உள்ள ஏழைகளுக்கு என்ன பதில் சொல்வது?. ஊராட்சி தலைவர் ஆதிதிராவிட பெண் என்பதால் அவருக்கு இணையாக எப்படி அமர்வது என்ற கீழ்த்தரமான சிந்தனையுடன் செயல்படுகிறார். 100 நாள் வேலை செய்யும் ஊழியர்களை அமரவைத்துக் கொண்டு ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராகச் செயல்படுகிறார். பி.டி.ஓ அனுமதி பெற்று நானும் பத்திரிகையாளர்களை விரைவில் சந்திக்கிறேன்" என்றார்.