நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (47) விவசாயியான இவர் நடப்புப் பருவத்தில் அவரது வயலில் குறுவை சாகுபடி செய்திருந்தார். சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகிச் சருகாவதைக் கண்டு கவலையில் உறைந்த ராஜ்குமார், வீட்டிலும் சக விவசாய நண்பர்களிடமும் நிலைமையைக் கூறி புலம்பியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வயலுக்குச் சென்றவர் காய்ந்த நெற்பயிர்களை டிராக்டர்களைக் கொண்டு அழித்துவிட்டு சம்பா சாகுபடிக்கான பணிகளையாவது துவங்கலாம் என முடிவெடுத்து மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், வயலிலேயே மயக்கம் அடைந்த அவரைச் சக விவசாயிகள் மீட்டுத் திருக்குவளையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அங்கிருந்து உடனடியாக மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருக்குவளை அருகே, கருகிய பயிரைக் காப்பாற்ற முடியாமல், கவலையில் இருந்த விவசாயி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விவசாயி ராஜ்குமார் உயிரிழப்பு குறித்து, வேளாண்துறை, வருவாய்த்துறை, காவல்துறை விசாரணை செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடாக ரூ. 25 லட்சம் தர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று தனது கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி, ராஜ்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு தர அரசை வலியுறுத்தியுள்ளார்.