கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சென்றவருடம் முதல் தமிழகத்தில் உள்ள கோவில்கள் பூட்டப்பட்டது. தளர்வுகள் கொடுக்கப்பட்ட பிறகும், பக்தர்கள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்த பிரசாதத்தை தபால் மூலம் பக்தர்களுக்கு வீடுதேடி வழங்க தபால் துறையுடன் பழனி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதில் அரை கிலோ பஞ்சாமிர்தம் ,விபூதி பாக்கெட், முருகனின் ராஜ அலங்கார உருவப்படம் அடங்கிய பார்சல் வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டம் ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முருகனின் பிரசாதம் பெற விரும்பும் பக்தர்கள் ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் அதற்கான படிவத்தைப் பூர்த்திசெய்து கொடுத்து 250 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
பிரசாதப் பொருட்கள் அடங்கிய பார்சல் விரைவு தபால் மூலம் வீட்டுக்கு வந்துவிடும் என தபால் நிலையப் பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும், ஆதார் அட்டையானது அனைத்துச் சேவைகளுக்கும் தற்போது தேவைப்படுவதால் பலர் புதிதாக ஆதார் அட்டை எடுக்கவும், ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யவும் நேரம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து ஆதார் சேவைக்காகப் பிரத்தியேக சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்தச் சேவை மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஈரோட்டைப் போலவே அனைத்து மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்களிலும் பழனி பஞ்சாமிர்த தபால் சேவை உள்ளது.