Skip to main content

பழனி முருகன் கோவிலுக்கு புதிய ரயில் தேவை! பாராளுமன்றத்திற்கு குரல் கொடுத்த எம்.பி.! 

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

Palani Murugan Temple needs a new train! MP who gave voice to Parliament!

 

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதி மக்களுக்காகத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார். 

 

நேற்று (13/12/2021) நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது தொகுதி மக்களுக்காக பாராளுமன்றத்தில் வேலுச்சாமி கூறியதாவது, "கொடைக்கானலில் இருந்து மூணாறு வரை சாலைத் திட்டத்தை அமல்படுத்தினால் மூணாறு வழியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல்  சென்று வருவதற்கும், விவசாயிகள் சென்று வருவதற்கும், வசதியாக இருக்கும். அதுபோல் திண்டுக்கல்- திருச்சி போகும் சீலப்பாடி பைபாஸ் சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருவதால் மேம்பாலம் அமைக்க வேண்டும். 

 

அதுபோல் திண்டுக்கல்லுக்கும், பழனிக்கும் இடையே 10 சப்வே உள்ளது. இதில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி விடுவதால், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அரண்மனைபுதூர் என்ற ஒரு கிராமமே இந்த சப்வே மூலம் மூழ்கி கிடக்கிறது. அதுபோல் கொடைரோட்டில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல வேண்டும். இந்த கொடைரோட்டிலிருந்துதான் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் போய் வருவதால், அனைத்து ரயில்களும் நின்று சென்றால் சுற்றுலா பயணிகளுக்கும் வசதியாக இருக்கும். 

 

அதுபோல் திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் வழியில் தாராபுரம், ஆயக்குடி, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அதுபோல் தமிழ்நாட்டிலேயே பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போகிறார்கள். இப்படி வரும் பக்தர்களுக்கு போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது. அதனால் பழனியில் இருந்து சென்னை எழும்பூர் புதிய ரயில் விட வேண்டும். அதன்மூலம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்" என்று கூறினார். 

Palani Murugan Temple needs a new train! MP who gave voice to Parliament!

அதன்பின் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்து தனது கோரிக்கை மனுக்களையும் கொடுத்தார். அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு புதிய  ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கையும் எம்.பி. வேலுச்சாமி முன்  வைத்திருக்கிறார். இந்த புதிய ரயில் கொடைரோட்டிலிருந்து நிலக்கோட்டை வத்தலக்குண்டு வழியாக தேனி, கம்பம், கூடலூர், குமுளி போய் கோட்டயம் செல்லும்.  இதன்மூலம் ஐய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் பயனடையவும் வாய்ப்புள்ளது. 

 

ஏற்கனவே, மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜா எக்ஸ்பிரஸ் கொடைரோட்டில் மட்டும்தான் நின்று சென்றது. திண்டுக்கல்லில் நிற்க வேண்டும் என்று வர்த்தகர் சங்கத்தினரும், பொதுமக்களும் வலியுறுத்தி எம்.பி.வேலுச்சாமியிடம் மனு கொடுத்தனர். 

 

அதை தொடர்ந்து, எம்.பி.யும் ரயில்வே அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்ததின் பேரில் திண்டுக்கல் ஜங்சனிலும் தேஜா ரயில் நின்று சென்று வருகிறது. அதுபோல் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரத்திலும் நின்று செல்ல வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதால் கூடிய விரைவில் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரத்திலும் நின்று செல்ல இருக்கிறது. இப்படி தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பாராளுமன்றத்திலும் அமைச்சரிடமும் கோரிக்கை வைத்து அந்த கோரிக்கைகளை தொகுதி மக்களுக்காக நிறைவேற்றி வருகிறார். 


 

சார்ந்த செய்திகள்