புவனகிரி அருகே மருதூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையம் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தக் கொள்முதல் நிலையம் தரையோடு அமைந்திருக்கிறது. இதனால், அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளும், மண் தரையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் மழையில் நனைந்து முற்றிலும் சேதமடைந்துள்ளன.
வியாழக்கிழமை (01.07.2021) இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அப்போது இவ்விடத்தில் 3 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அருகிலுள்ள வயலில் நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் வயலில் தேங்கும் தண்ணீர் நெல்லையும் சேதப்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகம், நெல் கொள்முதல் நிலையத்தை மேடான பகுதியில் சிமென்ட் தரைத் தளத்தில் அமைத்துத் தந்தால், இதுபோன்ற சேதங்கள் ஏற்படாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், விவசாயிகள் எடுத்துவரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து காத்திருக்க வைக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.