பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியரின் சாதி ரீதியான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“சுதந்திரம் என்பதுதான் மனித வாழ்வின் குறிக்கோள் என்றால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மேல் ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பதே சுதந்திரத்தின் பொருள்” என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.
சங்க இலக்கியம் கற்று, சாதி அற்ற சமூகத்தை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய தமிழ்த்துறை தலைவராக பணியாற்றிவரும் பேராசிரியை, அதற்கு எதிர் மறையாக தனது துறை சார்ந்த மாணவர் ஒருவரிடம் சாதிய ரீதியாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பாக்கியுள்ளது. அந்த செல்போன் ஆடியோவில். “நீங்க ரொம்ப நல்ல பையனாம், அனைத்து பேராசிரியர்களும் நற்சான்றிழ் கொடுக்கிறார்கள், அதனால்தான் நான் உன்னிடம் பேசுகிறேன். நீ என்ன சாதி என்பது கூட எனக்கு தெரியாது. ஆனாலும் நீ என்ன சாதி” என அந்த ஆசிரியை கேட்கிறார்.
அதற்கு அந்த மாணவன், “நான் பி.சி மேடம்” என்கிறான். அதற்கு அந்த ஆசிரியை, “எனக்கு மாணவர்களின் முகத்தை பாரத்தாலே யார் என்ன என்பது தெரிந்துவிடும்” என்கிறார். அதனைத் தொடர்ந்து தனது துறை சார்ந்த சில மாணவர்கள் என்ன சமூகத்தை சேர்ந்தவர்கள் என கேட்கவே, அதற்கு மாணவர் அவர்கள் யாரும் அந்த சாதியை சேர்ந்தவர்கள் இல்லை என்கிறான்.
அதற்கு மீண்டும் வேறு பெயர்களை சொல்லி இவர்கள் என்.எஸ்.எஸ். கேம்புக்கு போயிருக்கிறார்களா என்று கேட்டுவிட்டு, ஒரு மாணவனை குறிப்பிட்டு அந்த மாணவர் என்றதும். ஆமா மேடம் அந்த மாணவர் அந்த சமூகத்தை சார்ந்தவர்தான். ஆனால் அவனெல்லாம் அப்படி இல்லை, அவன் வேலை உண்டு, அவன் உண்டு என இருப்பான். அதற்கு அந்த ஆசிரியை இன்னும் சில மாணவர்களின் பெயர்களை சொல்லி அந்த மாணவர்களிடம் கொஞ்சம் தள்ளியே இரு, உசாரா இரு, என சொல்லும் விஷயம் மாணவர்களின் மத்திலும் மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆசிரியை ஏற்கனவே கடந்த வருடம் கொரோனா காலகட்டத்தில் கல்லூரி வருகை பதிவேடை வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த மாணவர்களை மட்டும் தேர்வு எழுத விடாமல் செய்துள்ளார். அந்த மாணவர்களை தற்போது தேர்வு எழுதினார்களா இல்லையா என்பதையும் தற்போது அந்த ஆடியோவில் கேட்டுள்ளார்.
இந்த பிரச்சனை மட்டும் இல்லாமல், தமிழ்த் துறையில் பணிபுரியும் பேராசிரியர்கள் சாதியினை தெரிந்துகொண்டு அந்த பேராசிரியர்களிடம் பேசவே மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களிடம் வெறும் எழுத்து வடிவிலான சர்குளர் மூலமே பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது. இதை எல்லாம் முன்வைத்து அந்த ஆசிரியயை கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காஞ்சிபுரம் கல்லூரிக்கு அவரை மாற்றியுள்ளனர். அதன்பிறகு உயர் நீதிமன்றம் சென்று மீண்டும் பச்சையப்பன் கல்லூரிக்கே வந்துள்ளார். தற்போது மீண்டும் இதே சிக்கலில் சிக்கியுள்ளார்.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் வருகின்ற திங்கள் கிழமை அன்று கல்லூரி கமிட்டி கூட்டப்பட்டு அந்த கமிட்டியின் மூலமாக ஆசிரியை மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.