கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு, அங்கு ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.
இதனையடுத்து, கடந்த 13ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு முதல் கட்டமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குளிர்விப்பானில் பழுது ஏற்பட்ட நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டு இருக்கிறது.
இதில், இன்று 6.3 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பழுதாகி ஒரு வாரத்திற்குப் பிறகு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஆக்சிஜன் உற்பத்தி என்பது ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.