கடந்த சில நாட்களாகக் கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தொடர்ச்சியான கனமழையால் விருத்தாசலம் அடுத்த மாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட, அருணாச்சல பிள்ளை ஏரி முழு கொள்ளளவை எட்டியதாலும், ஏரியின் கரை போதிய வலுவில்லாமல் போனதாலும் கரை உடைப்பு ஏற்பட்டு, காட்டாற்று வெள்ளம் போல் ஏரியின் தண்ணீர், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை அடித்துச் செல்கிறது. இதனால் ஏரியைச் சுற்றியுள்ள மாத்தூர், சித்தேரிக்குப்பம், கவணை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த கரும்பு, உளுந்து, நெல் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வருகிறது. ஏரியின் பாசனத்தை நம்பி ஒரு போகம் மட்டும் பயிர் செய்து வரும் இப்பகுதி விவசாயிகள், பல்வேறு இடங்களில் கடன்பெற்று விவசாயம் செய்து வந்த நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏரிக்கரை பராமரிக்கப்படாமல் போனதால், ஏரி உடைபட்டு தங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்து விட்டதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் நெய்வேலி அடுத்த பெரியாக்குறிச்சி பகுதிக்கு உட்பட்ட ஜி.பி. நகரில் கனமழையால் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் உள்ளே புகுந்தது. மழைநீர் உள்ளே புகுந்ததால் குடியிருப்புவாசிகள் விஷ ஜந்துக்களின் அச்சத்துடன் வசித்து வருவதாகவும், குடிப்பதற்குக் கூட தூய்மையான தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், சுமார் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல முடியவில்லை என்பதால் சாக்கடை கலந்த மழைநீரில் பொதுமக்கள், குழந்தைகள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வடிகால் வசதி ஏற்படுத்தித் தராமல் அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்படுவதாகவும், உடனடியாக அதிகாரிகள் தண்ணீரை அகற்றி வடிகால் வசதி அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அதேபோல் விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தில் வடிகால் வாய்க்காலைத் தூர்வாரக்கோரி, பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, வடிகால் வாய்க்கால்களைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் சாலை மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெண்ணாடம் அடுத்த வடகரை கிராமத்திலுள்ள வண்ணான்குட்டை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் நிரம்பி வெளியேறிய தண்ணீர் செல்ல வழியின்றி அருகிலிருந்த விளைநிலங்களுக்குப் புகுந்தது. இதில் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.