தமிழக முதலமைச்சர் நலமுடன் வாழ ஆத்தூர் தொகுதியில் உள்ள சித்தையன்கோட்டையில் மும்மத வழிபாடுடன் பொது அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.
சித்தையன்கோட்டை பேரூராட்சி திமுக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், சித்தையன்கோட்டை மரக்காயர் மற்றும் ரபீக் மைதீன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பேரூர் திமுக செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பூரண குணமடைந்து மத நல்லிணக்க ஆட்சியை சிறப்புடன் நடத்த சிறப்பு வழிபாடு நடத்தினர். அதேபோல், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான ஐ.பெரியசாமிக்காகவும் சிறப்பு வழிபாடு செய்தனர்.
மும்மத வழிபாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்றபோது தமிழக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தன்னுயிரையும் பொருட்படுத்தாது மக்கள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்து சிறப்புடன் செயல்பட்டு தமிழக மக்களை காப்பாற்றிய ஒப்பற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்றார்.
அதைத் தொடர்ந்து இறுதியாக பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கிய தமிழகத்தை, முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல இரவு பகல் பாராமல் அயராது உழைத்து வருபவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகம் முழுவதும் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக தொகுதி முழுவதும் அரசு கலைக் கல்லூரியை திறந்து வைத்து வருகிறார். குறிப்பாக நமது ஆத்தூர் தொகுதியில் மட்டும் தனிகவனம் செலுத்தி கூட்டுறவுத்துறை சார்பாக ஒரு கலைக் கல்லூரியும், அரசு சார்பாக ஒரு கலைக் கல்லூரியும் கொண்டு வந்ததால் ஆயிரக் கணக்கான மாணவர்கள் இன்று பயன் பெறுகிறார்கள்.
வருங்காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளின் சார்பாக ஆத்தூர் தொகுதியில் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும். முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் அவருக்காக மும்மத மக்கள் பிரார்த்தனை செய்யக்கூடிய அளவிற்கு மக்களின் நன்மதிப்பை பெற்ற முதல்வராக நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்” என்று கூறினார்.
அதன்பின்னர் அன்னதானத்தை துவக்கி வைத்தார். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிலால் உசேன், முன்னாள் ஒன்றிய செயலாளர் முரளிதரன், பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜன், ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் காணிக்கைசாமி, பாப்பாத்தி மற்றும் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், இளைஞரணியினர், மகளிரணியினர் உட்பட பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.