கரோனா பரவல் காரணமாக மத்திய – மாநில அரசுகளின் விதிமுறைகளின்படி, மதத் திருவிழாக்கள், அரசியல் பொதுக் கூட்டங்கள் பெரிய அளவில் நடத்துவதற்குத் தடையுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா என்பது புகழ்பெற்றது. திருவிழா நடைபெறும் 13 நாட்களும், முதல் நாள் ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்கள், பெரிய தேர் மற்றும் மகா தீபத்தன்று லட்சங்களில் வருவார்கள். வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களால் கரோனா பரவும் அபாயம் ஏற்படும் எனக் கோவிலுக்குள்ளேயே சிம்பிளாக திருவிழாவை நடத்த முடிவு செய்த மாவட்ட நிர்வாகம், அதன்படி நடத்திவருகிறது. கடந்த 9 நாட்கள் திருவிழா முடிந்த நிலையில், நவம்பர் 29 -ஆம் தேதி விடியற்காலை அண்ணாமலையார் சன்னதிக்குப் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.
இதனைக் காண 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், ஒவ்வொரு ஆண்டும் வருவார்கள். இந்தாண்டு இவ்வளவு பக்தர்களை அனுமதித்தால், மாநிலம் முழுவதும் கரோனா பரவும் அபாயம் ஏற்படும் என்பதால், தீபத் திருவிழாவைக் காண வெளிமாவட்ட, வெளிமாநிலப் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. வரும் 27, 28, 29 ஆம் தேதிகளில் திருவண்ணாமலை நகருக்கு, வெளிமாவட்ட பக்தர்கள் யாரும் வர அனுமதியில்லை என முன்பே அறிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை நகர மக்கள், வெளியூரில் இருந்து வந்தால் இங்கு வசிப்பதற்கான அடையாள அட்டை ஒன்றைக் காட்டினால் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுவர் எனச் சொல்லப்பட்டுள்ளது. அந்த தேதிகளில், மாற்றம் செய்யப்பட்டு நவம்பர் 28, 29, 30 -ஆம் தேதிகளில் நகருக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளில் உள்ள வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், பிறமாவட்ட, மாநில பக்தர்கள் வராதவண்ணம், மாவட்ட எல்லை மூடப்பட்டது. மாவட்டத்துக்குள் வரும் வழிகள் என 15 சாலைகள் மற்றும் சிறுசிறு சாலைகளிலும் கார், வேன், இருசக்கர வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி, உரிய விசாரணைக்குப் பின்பே காவல்துறையினர், மாவட்டத்துக்குள் அனுமதிக்கின்றனர்.
நவம்பர் 28 -ஆம் தேதி இரவு முதல் திருவண்ணாமலை நகரத்துக்குள் வரும் 9 சாலைகளும் அடைக்கப்படுகின்றன. நகரவாசிகள் மட்டுமே நகரத்துக்குள் வரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யார், ஆரணி, வந்தவாசி, செங்கம், தண்டராம்பட்டு, வானாபுரம், காஞ்சி, சேத்பட், கண்ணமங்களம் எனப் பல்வேறு பேரூராட்சி, நகராட்சிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் நகருக்குள் வராதபடி தடுக்கப்படுகிறது. இவைகள் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்களில் நிற்கவைக்கச் சொல்லப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகர எல்லையை ஒட்டியுள்ள கிராம மக்கள்கூட இதனால் நகரத்துக்குள் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தடை நவம்பர் 30 -ஆம் தேதி இரவு வரை நடைமுறையில் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.