சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், செம்மலை, கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அதேபோல், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் கூறுகின்றன.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டம் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை கட்சித் தொண்டர் ஒருவர் தான் வைத்திருந்த பிளேடால் கிழித்தார். இதனால், அக்கட்சியினரிடையே அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மாவட்டச் செயலாளருமான பெஞ்சமின், "அ.தி.மு.க. பேனரில் ஓ.பி.எஸ். படத்தைத் தொண்டர்கள் தெரியாமல் கிழித்துவிட்டனர்" என்றார்.