தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகனான ரவீந்திரநாத் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார். அதன் அடிப்படையில் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உட்பட முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பொறுப்பில் உள்ள ர.ர.க்களும் தேர்தல் களத்தில் குதித்து தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியாக ரவீந்திரநாத்தை அழைத்துக் கொண்டு வாக்காள மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
ஆனால் துணை முதல்வரான ஓபிஎஸ் இதுவரை பெரியகுளம். போடி என நான்கு முறை போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்து தற்போது துணை முதல்வராக இருந்து வருகிறார். அப்போது எல்லாம் ஓபிஎஸ் குடும்பப் பெண்கள் வீட்டை விட்டு கூட வெளியே வர மாட்டார்கள்.
அதுபோல் வாக்கு சேகரிக்க தேர்தல் களத்தில் குதித்ததும் இல்லை ஆனால் தற்பொழுது ஓபிஎஸ் குடும்பத்திலிருந்து அவருடைய மகன் ரவீந்திரநாத் தேர்தல் களத்தில் குதித்து இருப்பதால் எப்படியும் ரவி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மனைவியான ராஜலட்சுமி மற்றும் ரவீந்திரநாத் மனைவியான ஆனந்தி. அதோடு ரவீந்திர நாத்தின் தம்பியான ஜெயபிரதீப் மனைவியான கீர்த்திகா உள்பட உறவுக்காரப் பெண்கள் சிலர் தொகுதியில் உள்ள கம்பம்,போடி, பெரியகுளம், தேனி உள்பட சில பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கட்சிக்காரர்களை திரட்டி கொண்டும் அதிமுக கரை போட்ட மப்ளர் துண்டை தோளில் போட்டவாரே இருகரம் கூப்பி வாக்காளர்களிடம் ரவீந்திரநாத்துக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு வருகிறார்கள்.
இப்படி ஓபிஎஸ் குடும்ப பெண்கள் தேர்தல் களத்தில் குதித்து வேட்பாளர் போல் அதிமுக கரைபோட்ட மப்ளர் துண்டை தோளில் போட்டவாரே தெரு தெருவாக அந்த பகுதி கட்சிகாரர்களுன் சென்று வாக்காள மக்களிடம் ஆதரவு திரட்டி வருவதைக் கண்டு பொதுமக்களே அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.