மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று, விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில், கடைகள் அடைக்கப்பட்டன, பல தொழிலாளர் அமைப்புகள் வேலை நிறுத்ததிலும் ஈடுபட்டனர். மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் பல இயக்கங்கள் சார்பில் நாடுமுழுவதும் மறியல் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
சென்னை, கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் சார்பான கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் க.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் ஹசன் ஹாரூன் தலைமையில் நேற்று பிற்பகல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.