சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "கள்ள ஓட்டுப்போட முயன்ற தி.மு.க. பிரமுகரைப் பிடித்துக் கொடுத்தது தவறா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்துக்குரியது. கள்ள ஓட்டுப்போட முயன்றவரைப் பிடித்துக்கொடுத்தது தவறு என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறாரா? குற்றம்புரிந்தவர்களைப் பிடித்துக் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து முதலமைச்சர் சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார். ஒன்பது மாத கால தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் சட்ட ரீதியாக சந்திக்க நாங்கள் தயார்; மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றால் தோல்வி என அறிவிக்க அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் ஜனநாயக முறைப்படி நடுநிலையுடன் செயல்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி, ஒவ்வொரு வார்டுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் முடிவை அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் தவறு நேர்ந்தால் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம். அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டத்திற்கு புறம்பாக கோவையில் தங்கி செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நியாயமாக நடைபெற்றது; தி.மு.க. ஆட்சியில் தேர்தல் ஆணையம் கைப்பாவையாகச் செயல்படுகிறது. மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையும் சுயமாக செயல்படவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.