முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று அரசுப் பணிகளில் சேர விரும்பும் இளைஞர்கள், இன்று (25/05/2022) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்காக, நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு, முதலமைச்சர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகள் ஆகியவற்றில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறன்மிகு இளைஞர்களின் திறமைகளைப் பயன்படுத்தி, நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவைகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதில் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூபாய் 65,000 மற்றும் பேருந்து, தங்குமிடம் உள்ளிட்டவைகளுக்கு ரூபாய் 10,000 என மொத்தம் ரூபாய் 75,000 வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் ஜூன் 10- ஆம் தேதி வரை என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tn.gov.in/tncmfp மற்றும் www.bim.edu/tncmfp ஆகிய இணைய தளப் பக்கங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.