தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், நேற்று (18.06.2021) 9 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தது. எனவே தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற 28ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிப்பதற்கான பரிந்துரையை மருத்துவர் வல்லுநர் குழு வழங்கியுள்ளது.
சில மாவட்டங்களில் தொற்று இன்னமும் குறையாத நிலை நீடிப்பதால் ஊரடங்கை ஒருவாரம் நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா பரவல் அதிகம் உள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவை அனுமதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 30 மாவட்டங்களில் 50 சதவீதம் பயணிகளுடன் பேருந்து சேவைகள் அனுமதி அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.