தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த அக்டோபர் இறுதியில், நவம்பர் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், அதேபோல் தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாகவும், கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து எதிர்க்கருத்துகள் வெளியாக, 9-ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் தலைமையில் கூட்டம் நடைபெறும். மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைக் கூறலாம். நேரில் பங்கேற்க இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கருத்துக் கேட்புக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.