தமிழ்நாடு டிஜிபியாக சைலேந்திரபாபு, பொறுப்பேற்ற சில தினங்களிலேயே தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் புத்தாண்டு வாழ்த்துகளுடன் தமிழக காவல் துறையினருக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எழுதியுள்ள கடிதத்தில், '2021 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு, தேவர் குருபூஜை, இமானுவேல் சேகரன் நினைவு தினம், திருவண்ணாமலை தீபம் உள்ளிட்ட பெரிய நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்தி முடித்தோம். சட்டம்-ஒழுங்கு பேணிகாக்கப்பட்டது. அதிகாரிகளும், ஆண், பெண் காவலர்களும் இதற்கு காரணம். தென்மாவட்டங்களில் நிகழ்ந்த சாதிய கொலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழிக்குப்பழி வாங்கும் ரவுடிகளை 'ஆபரேஷன் ரவுடி வேட்டை' என்ற பெயரில் ஒடுக்கி வருகிறோம்'. காவல்துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். இதயத்தில் எந்த கெடுதலும் இன்றி நமது திறமையாலும், அறிவினாலும் போரிடுவோம்' என்று தெரிவித்துள்ளார்.