கடந்த மே 7 அன்று திறக்கப்பட்ட மதுக்கடைகள் இரண்டு நாட்களுக்குப் பின்பு உயர்நீதிமன்றத் தடையால் மூடப்பட்டது. பின்னர் அரசு, உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றமும் சில வழிகாட்டுதலின்படி திறக்க அனுமதியளித்தது.
அதன்படி மே 7 அன்று திறக்கப்பட்ட பகுதிகளின் மதுக்கடைகள் மட்டுமே மீண்டும் திறக்கப்பட்டன. குடி மகன்கள் பாட்டலுக்காக காலை முதலே திரளத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் கரிவலம் பகுதியின் டாஸ்மாக், சுற்று வட்டாரக் கிராமப்புறங்களை கொண்ட ஒரே மதுக்கடை. எனவே கூட்டம் கூட்டமாகத் திரண்டு விட்டனர்.
சமூக இடைவெளியின்றி முண்டியடித்துக் கூட்டமாக நின்றனர். முறைப்படி ஆதார் கார்டுகளின் நம்பர்கள் குறிப்பதற்கு நேரமாகிறது என்பதால், அந்த நடைமுறை தவிர்க்கப்பட்டது. இன்றைக்கு ஆரஞ்சு நிற டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் வரைமுறைப்படி 180 மில்லி பாட்டில் நான்கு மட்டுமே ஒரு நபருக்கு சப்ளை என்ற நிலை மாறி எத்தனை பாட்டில்கள் கேட்டாலும் தரப்படுகின்றன. பாட்டில்களை நிரப்பிக்கொண்டு குஷியாகவே நடைபோடுகின்றனர்.
மதுக்கடை திறப்பு நீடிப்பது சந்தேகமாகியிருப்பதால் கேட்டவைகளை கொடுக்க வேண்டிய நிலை என்கின்றனர் விற்பனையாளர்கள். தடையின்றி சப்ளை அமர்க்களப்படுகிறது.