தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (30/09/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூபாய் 10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சைப் பராமரிப்பு மைய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும், பள்ளிக்கல்வித்துறை, சுற்றுச்சூழல் துறை, காலநிலை மாற்றத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூபாய் 17.44 கோடி மதிப்பீட்டில் 11 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்துவைத்தார்.
அதைத் தொடர்ந்து, 100% கரோனா தடுப்பூசியை செலுத்தியதற்காக கிருஷ்ணாபுரம், நல்லாசேனஹள்ளி, வெள்ளோலை, கே.நடுஹள்ளி, கடகத்தூர், பூகானஹள்ளி, பொம்மஹள்ளி ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தேசிய நல்வாழ்வு குழுமத் தலைவர், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.