![Open water from the kallanai to the veeranam lake](http://image.nakkheeran.in/cdn/farfuture/yzE3oQ9bRyFmkh-vSekOSvRjaNL6L9aNwZSA46uVXbQ/1592741361/sites/default/files/inline-images/AERH.jpg)
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியை நிரப்பும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த நிலையில் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், வெயிலாலும் தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 40.38 அடி உள்ளது.
மேட்டூர் அணையை கடந்த 12ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாசனத்துக்காக திறந்தார். இதனை தொடர்ந்து கல்லணையில் கடந்த 16ம் தேதி கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் விநாடிக்கு 150 கன அடிவீதம் இன்று(21ம் தேதி) கீழணையை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த 150 கன அடி தண்ணீரை வடவாற்றில் திறந்துவிட்டு வீராணம் ஏரிக்கு அனுப்பி வருகின்றனர். இன்றும் ஒரு வாரத்தில் ஏரி நிரம்பும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், அணைக்கரை உதவிப்பொறியாளர் அருணகிரி ஆகியோர் கூறுகையில், கல்லணையில் இருந்து கீழணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி ஏரியை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விவசாய பாசனத்துக்கும், சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பிடவும் ஏரி நிரப்பப்படுகிறது. ஏரி நிரம்பிய பிறகு கீழணையில் தண்ணீர் தேக்கி வைத்து அதன் முழு கொள்ளளவான 9 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்த உடன் கீழணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்றனர்.