மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரம், கலைஞரின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில், மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால், அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது ஆதரவுகளையும் எதிர்ப்புகளையும் பெற்றது. இந்நிலையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடை கோரிய வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை பதில் மனு அளித்துள்ளது. இதில் அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்ட பிறகே சென்னை மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்கப்படும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.