கர்நாடகா மாநிலம், துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 27 வயது இளைஞர். இவருக்கும், குடகு மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர்களால் திருமண ஏற்பாடு நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்களது திருமணம் நேற்று (06-05-24) நடைபெற இருந்தது. இந்தத் திருமணத்தை முன்னிட்டு, நேற்று முன் தினம் (05-05-24), தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் என அனைவரும் பங்கேற்றனர். அப்போது, விருந்து நடைபெறும் இடத்தில், சாப்பாட்டு இலையில் இனிப்பு வழங்காமல் மணமகள் வீட்டார் நிராகரித்து விட்டதாகவும், அதனால் தங்களது சம்பிரதாயத்தை மணமகள் வீட்டார் அவமதித்துவிட்டதாகவும் கூறி மணமகன் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. இதில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில், இந்தத் திருமணம் வேண்டாம் என மணமகன் வீட்டார் கூறிவிட்டனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்தனர். ஆனால், அதுவரை பொறுமையாக இருந்த மணமகள், ‘திருமணத்திற்கு முன்பே ஒரு சிறிய விஷயத்துக்காக இவ்வளவு பிரச்சனை என்றால், திருமணத்திற்கு பின்பு தன்னால் நிம்மதியாக வாழ முடியாது’ எனக் கூறி இந்தத் திருமணத்தை நிறுத்தினார்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து மணமகள் சோமவார் பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில், ‘திருமண ஏற்பாடுக்காக அதிகமாக நாங்கள் செலவு செய்திருக்கிறோம். இதனால், என்னுடைய பெற்றோர் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள். அதனால் அந்தச் செலவுகளை மணமகன் வீட்டார் தர வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்திய போலீசார், அந்தச் செலவுக்கான பணத்தை மணமகன் வீட்டாரிடம் இருந்து பெற்று மணமகள் வீட்டாரிடம் கொடுத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.