Skip to main content

ஆன்லைன் வகுப்புகள் நடத்த இடைக்காலத்தடை விதிக்க மறுப்பு! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு...

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

  Online class issue

 

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்த இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், ஒழுங்குபடுத்த என்ன விதிமுறைகளைக்  கொண்டு வரவுள்ளீர்கள் என்பது குறித்து மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.


கரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.

ஆன் லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும்போது ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும்வரை ஆன் லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கக்கோரி, சென்னை புத்தகரம் பகுதியை சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மாநிலத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர்கள் உள்ளன.  டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவதால் நகர்புற – கிராமப்புற மற்றும் ஏழை – பணக்கார மாணவர்களுக்கு இடையில் சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளது. 

 

 


முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களை சந்தித்துள்ளனர்,  பல இடையூறுகளும் உள்ளன. ஆபாச இணையதளங்களை மாணவ, மாணவியர் பார்ப்பதை தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்காமல் ஆன் லைன் வகுப்புகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வினீத்கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏதாவது விதிமுறைகள் உள்ளனவா? ஏதாவது திட்டம் உள்ளதா? எனக் கேள்விகள் எழுப்பினர். 

மாநில அரசு பிரத்யேகக் கல்விச் சேனல் வைத்துள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தெரிவித்தார். கோவிட் காரணமாக அனைத்துமே ஆன் லைன் முறையில் உள்ளது. தற்போது எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், ஆன் லைன் கல்வியை ஒழுங்குபடுத்த ஏதாவது நிரந்தர திட்டம் உள்ளதா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 20- ம்தேதிக்கு ஒத்திவைத்து  உத்தரவிட்டனர்.
 

 

சார்ந்த செய்திகள்