தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. அதேபோல் தமிழக அரசு அறிவித்திருந்த பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நேற்று மத்திய அரசு வெளியிட்ட மூன்றாம் கட்ட தளர்வுகளில் கூட பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்பே, ஆன்லைன் மூலம் பாடம் நடத்த மத்திய அரசு சில திட்டங்களையும், மாநில அரசும் பல முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. இந்நிலையில் இணையவழி வகுப்புளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முழுமையான இணைய வழி, பகுதியளவு இணைய வழி, ஆஃப்லைன் மோடு முறைகளில் பாடம் நடத்தலாம். தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 8- ஆம் வகுப்புகளுக்கு அதிகபட்சமாக 1.30 மணி நேரமும், 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே வகுப்பு நடத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இணையவழி வகுப்பில் பங்கேற்க மாணவர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது. ஒரு ஆசிரியர் 6 வகுப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் 30 முதல் 45 நிமிடங்கள் தான் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.