லாரியில் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பதுக்கி வைத்து கடத்தி வந்ததாக கிருஷ்ணகிரி அருகே லாரி மற்றும் போதைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கரோனா ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமலில் இருந்தபோதும் கூட, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டதால், தனிநபர் கடைகள், தேநீர் கடைகள், பீடா கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட குட்கா வியாபாரிகள், அத்தியாவசியப் பொருள்களுடன் மறைத்து வைத்து போதைப் பொருள்களை கடத்துவது அதிகரித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல்துறைக்கு, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காய்கறி சரக்கேற்றிச் செல்லும் லாரியில் குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் ரஜினி மற்றும் காவலர்கள், சனிக்கிழமை (மே 30) ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரிமேடு என்ற இடத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாகச் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு மினி லாரியை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். அதில் வெங்காய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த மூட்டைகளுக்கு அடியில் 123 பெட்டிகளில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு 10 லட்சம் ரூபாய்.
விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜூ (36), உதவியாளராக வந்தவர் பொன்னேரி மீஞ்சூரை சேர்ந்த மணி (32) என்பது தெரிய வந்தது. பெங்களூரு சந்தாபுரத்தில் இருந்து சென்னைக்கு குட்கா பொருள்களைக் கடத்திச்செல்வது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், போதைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குருபரப்பள்ளி காவல்துறையினர், லாரி உரிமையாளரான விழுப்புரம் மாவட்டம் புது காலனியைச் சேர்ந்த செல்வகுமார் (45), குட்கா பொருள்களை ஆர்டர் செய்திருந்த சென்னை மாதவரத்தைச் சேர்ந்த பால்ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.