தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ஆளுநராகப் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய தமிழிசை சவுந்தரராஜன், மீம்ஸ் போடுபவர்களைக் குறித்து பேசினார். அப்போது, "தமிழக பாஜகவின் தலைவராக இருந்த காலகட்டத்தில், விமானப் பயணத்தில் மீம்ஸ் போடும் நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவரிடம் நான், 'என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உங்களுக்கு? எல்லோரும் என்னை மட்டும் ஏன் மீம்ஸ் போடுறீங்க. வேறுயாரும் கருப்பா, குள்ளமா இல்லையா? யாருக்கும் சுருட்டை முடி இல்லையா?’ என்று கேட்டேன்.
‘அக்கா, உங்களைவைத்து மீம்ஸ் போட்டால்தான் அதிக வியூஸ் கிடைக்குது. அதுதான் வியாபாரம் ஆகுது. அதனால்தான், அதிக வியூஸ் வந்தால்தான் எங்களுக்கு அதிக வருமானம் வரும்’ என்றார். விமானம் தரையிறங்கும் போது, ‘அக்கா மன்னிச்சிடுங்க. உங்களை மீம்ஸ்ல இனி போடமாட்டேன்’ என்றார். அப்போது நான், ‘எனக்கு அவமானம் என்றாலும் உங்களுக்கு வருமானம் என்றால், அதை நீங்கள் தொடருங்கள். என் தன்மானத்தைக் குறைத்து உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் நீங்கள் தொடருங்கள்’ என்று கூறினேன். இதுதான் என் இயல்பு. எப்போதும் நான் அதிலிருந்து மாறியது கிடையாது" இவ்வாறு பேசினார்.