அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்கள் குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு
வருகிற 14–ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி மற்றும் 15–ந் தேதி சுதந்திர தின விடுமுறை என்பதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்த்து 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் உள்பட பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று கிளம்பினார்கள்.
இதனை பயன்படுத்தி பல ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சென்னை கோட்ட போக்குவரத்து இணை ஆணையர் வீரபாண்டி ஆகியோர் நேற்று இரவு 10 மணி முதல் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிக கட்டணங்கள் வசூலித்ததாக 11 ஆம்னி பஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டன. இதில் அதிக கட்டணத்தை திருப்பிக்கொடுத்த பஸ்கள் தங்கள் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டன.