உலக நாடுகளை அச்சுறுத்திவந்த கரோனா வைரஸ் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது. ஆனால், தற்போது கரோனாவின் உருமாறிய வைரஸான ஒமிக்ரான், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் தொற்று இதுவரை 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் கர்நாடகாவில் இரண்டு பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. பரிசோதனையில் யாருக்காவது நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் தயார் செய்யும்படி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அந்தவகையில், திருச்சி அரசு மருத்துவமனையில், ‘குடிபோதை மீட்பு சிகிச்சை மையம்’ கட்டடம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தரை தளம், முதல் தளம், இரண்டாவது தளம் என மூன்று தளங்களில் 30 படுக்கைகளுடன் இந்த வார்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் யாருக்காவது நோய்த் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தால் அவர்கள் இந்த வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.