
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள குணமங்கலம் காலனி கிழக்கு தெருவில் வசிப்பவர் 75 வயது பெரியசாமி. இவருடைய மனைவி பவுனம்மாள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பெரியசாமி மனைவி பவுனாம்பாள் இறந்துவிட்டார். மனைவி இறந்த பிறகு பெரியசாமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இறந்து போன அவரது மனைவி பயன்படுத்திவந்த பழைய பெட்டியை பெரியசாமி சில நாட்களுக்கு முன்பு திறந்து சுத்தம் செய்துள்ளார். அப்போது அந்த பெட்டியில் அவரது மனைவி வைத்திருந்த சேலைகளுக்கு மத்தியில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்துள்ளன. அவைகளை எடுத்து எண்ணிப் பார்த்ததில் மொத்தம் 20,000 ரூபாய் இருந்துள்ளது.
பணமதிப்பிழப்பு காரணமாக அந்த பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது குறித்து விபரம் தெரியாத பெரியவர் பெரியசாமி, அந்த நோட்டுகளை எடுத்துக் கொண்டு மளிகை பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அங்கு 500 ரூபாய் கொடுத்து பொருட்கள் கேட்டபோது இந்தப் பணம் செல்லாது இது பழைய 500 ரூபாய் நோட்டு என்று கூறியுள்ளனர். இதை மாற்றுவதற்கு என்ன வழி என்று பலரிடமும் பெரியசாமி விசாரித்துள்ளார்.
வங்கிகளில் சென்று கேட்டு பார்க்குமாறு கூறியுள்ளனர். பெரியசாமி 20 ஆயிரம் ரூபாய் பழைய 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பல வங்கிகளுக்கும் சென்று பழைய 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு புதிய நோட்டுகளை தருமாறு கேட்டுள்ளார். வங்கி ஊழியர்கள் இந்த ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாது இதற்கான காலக்கெடு முடிந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறியுள்ளனர். இதன் பிறகு பெரியவர் பெரியசாமி அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு இந்த நோட்டுக்களை கொடுத்துவிட்டு புது ரூபாய் நோட்டுக்களாக எப்படிப் பெறுவது யாரிடம் போய் கேட்பது என்று எந்த விபரமும் புரியாமல் கைநிறைய 20,000 பணம் இருந்தும், அது உபயோகம் இல்லாமல் வறுமையில் பரிதவித்து வருகிறார். அந்த ஏழை முதியவருக்கு அரசு அதிகாரிகள் அந்தப் பழைய பணத்தை புதிய பணமாக மாற்றுவதற்கு உதவி செய்வார்களா? அது சாத்தியப்படுமா? என்ற குழப்பத்தோடு பரிதவிப் போடும் கேட்கிறார்கள் அப்பகுதி மக்கள்.