அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான நிர்வாகம், தேர்தல், தேர்வு என ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், ''ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு முறை பின்பற்றப்படுவதை மாற்றி அமைத்து எல்லா பல்கலைக்கழகங்களிலும் அது நியமனமாக இருந்தாலும், தேர்தல் கட்டணமாக இருந்தாலும் எல்லா பிரச்சனைகளிலும் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஒரு குழுவை நியமித்து வெகு விரைவில் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், எழுத்தர்கள், அதுபோல பதிவாளர்கள் இவர்களுக்கெல்லாம் ஒரே மாதிரியான ஊதியம் கொடுப்பதை பற்றியும், மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை ஒரே மாதிரி கட்டணத்தை வசூலிப்பது என்பதைப் பற்றியும், ஒரே மாதிரியான நிர்வாகத்தை உருவாக்குவது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையே வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான நிலைமையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு குழு நியமிக்கப்பட இருக்கிறது. அந்த குழுவினுடைய கோரிக்கையை ஏற்று வெகு விரைவில் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்திற்குள் அதற்கான முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்படும். தேர்வுக் கட்டணம் எவ்வளவு என்பதும் அறிவிக்கப்படும் என்பதை முடிவு செய்து இருக்கிறோம்.
குறிப்பாக இன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தினுடைய மாணவர்கள் ஒரு வார காலமாகத் தேர்வுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுவிட்டது என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்பதை உங்கள் மூலமாக அந்த மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். பழைய கட்டணம் எவ்வளவோ அதுவே வசூலிக்கப்படும். சென்ற ஆண்டு கட்டணம் கட்டி இருந்தால் அதைப் பற்றி கவலைப்படக் கூடாது. இனிமேல் கண்டிப்பாக பழைய கட்டணமே வசூலிக்கப்படும். இனிமேல் அடுத்த ஆண்டு தேர்வு வருகின்ற பொழுது எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிப்பதற்காகத் தான் கமிட்டி நிறுவப்பட்டுள்ளது. நிச்சயமாக அவை வருகின்ற காலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்படும்'' என்றார்.