Skip to main content

உடல் உறுப்பு தானம் வழங்குகின்றவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க கோரிக்கை

Published on 22/10/2017 | Edited on 22/10/2017
உடல் உறுப்பு தானம் வழங்குகின்றவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க கோரிக்கை

"உடல் உறுப்பு தானம் வழங்குகின்றவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அச்சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி கூறியிருப்பதாவது, 

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த தேவரிஷிகுப்பத்தில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வந்த சேட்டு (வயது-38) என்பவர் கடந்த 19ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டு வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவை எய்தியுள்ளார்.

அதனால் அவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் அவரது இதயம், நுரையீரல், ஒரு சிறுநீரகம், கணையம் ஆகிய உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கும், மற்றொரு சிறுநீரகம், கல்லீரல், கண்கள் வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கும் பொறுத்தப்பட்டு சுமார் 7பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

கணவரை இழந்து, தந்தையை இழந்து தவிக்கும் சூழ்நிலையிலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கிட முன் வந்த அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பணம் செய்வதோடு, "இறந்தும் வாழும் பால் முகவர் திரு. சேட்டு அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வீரவணக்கம்" செலுத்தி அவரது ஆத்மா இறைவனின் பாதத்தில் இளைப்பாறவும், ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

மேலும் உடல் உறுப்பு தானம் வழங்குகின்றவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின்சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

கடந்த 2014ம் ஆண்டு வேலூர் மாவட்டம் துத்திக்காடு எனும் கிராமத்தில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வந்த பால் முகவர் திரு. விஷ்ணு குமார் என்பவர் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவை எய்திய சூழ்நிலையில் அவரது உடல் உறுப்புகள் "சென்னையில் ஒரு நாள்" பட பாணியில் ஆம்புலன்சில் சுமார் 1.45நிமிடத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு 4பேருக்கு மறுவாழ்வு அளித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்