Skip to main content

“வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும்” - மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் 

Published on 09/07/2023 | Edited on 09/07/2023

 

O. Panneer Selvam on the women's rights program which is an act of deceiving the people who voted

 

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து நேற்று முன்தினம்  நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டம் குறித்துப் பேசியிருந்தார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது' எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி? யார் யாருக்கு இந்த உரிமைத் தொகை கொடுக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியது.

 

இந்நிலையில் முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அதை மேடைக்கு மேடை பேசி, அதன்மூலம் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, இரண்டு ஆண்டுகள் கழித்து அதனை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி அதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருப்பதைப் பார்க்கும்போது "பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது" என்ற ஆப்ரகாம் லிங்கன் அவர்களின் பொன்மொழிதான் நினைவிற்கு வருகிறது.

 

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றுதான் அறிவிக்கப்பட்டு இருக்கிறதே தவிர, அதற்கான நிபந்தனைகள் ஏதும் சொல்லப்படவில்லை. இதனால், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது என்று சொன்னால், கிட்டத்தட்ட 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த உரிமைத் தொகையினை பெறுவதற்கான வழிமுறைகளைப் பார்க்கும்போது, தகுதியுள்ளவர்களை கண்டுபிடிப்பதே மிகவும் சிரமம்.

 

உதாரணமாக, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில், ஆண்டு வருமானம் 2.5 இலட்சம் ரூபாய்க்கு கீழ் வருமான ஈட்டும் குடும்பங்கள் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுடையவர்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன்படி பார்த்தால், ஒரு குடும்பத்தில் இரண்டு, மூன்று பேர் வேலைக்குச் சென்று, அவர்களின் ஒட்டுமொத்த வருமானம் 2.5 இலட்சத்திற்கு மேலாக சென்றால், அந்தக் குடும்பத்தில் உள்ள மகளிர், உரிமைத் தொகையை பெற முடியாது. ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று சொல்லும் அரசு, அக்குடும்பத்தில் உள்ள அனைவரின் வருமானத்தையும் கணக்கெடுப்பது என்பது இயற்கை நியதிக்கு முரணானது.

 

அதேபோல, ஆண்டுக்கு 2.50 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெற்று, வருமான வரி தாக்கல் செய்பவர்கள் இந்தத் திட்டத்தில் பயன் பெற தகுதியில்லை என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன்படி பார்த்தால், ஒரு குடும்பத்தில் ஆண் ஒருவர் ஆண்டுக்கு 2.50 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெற்று, வரி வராவிட்டாலும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தால் அவருடைய குடும்பத்தில் உள்ள மகளிர், உரிமைத் தொகையை கோர முடியாது. ஆண்டுக்கு 7 இலட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று வருமான வரிச் சட்டம் கூறுகின்ற நிலையில், 2.50 இலட்சம் ரூபாய் என்று வருமான வரம்பினை விதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

 

இதேபோன்று, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் பெறுவோர், அமைப்புசாரா தொழிலாளர் நலத் திட்டங்களின்கீழ் ஓய்வூதியம் பெறுவோர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியற்றவர்களாகின்றனர். இவர்களின் ஆண்டு வருமானம் ஒரு இலட்சம்  ரூபாய்க்கும் குறைவாக இருந்தாலும், அரசு விதித்துள்ள நிபந்தனைகளின்படி, இவர்களும் மகளிர் உரிமைத் தொகை கோர முடியாது. ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களைச் சார்ந்த மகளிர் இந்தத் திட்டத்தின்கீழ் பயன் பெற முடியாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கிறது. மாதத்திற்கு 300 யூனிட் என்பது சர்வ சாதாரணமான ஒன்று. இதை ஒரு நிபந்தனையாக வைப்பது என்பது கேலிக்கூத்தானது.

 

தொழில் வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற முடியாது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தொழில் வரி என்பது 21,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் 21,000 ரூபாய் மாத ஊதியம் என்பது எல்லோரும் வாங்கக்கூடிய ஒன்று. இந்த ஒரு நிபந்தனை மட்டும் பல மகளிரை உரிமைத் தொகை பெறுவதிலிருந்து தகுதி இழக்கச் செய்கிறது. மகளிர் உரிமைத் தொகை பெற தி.மு.க. அரசு விதித்துள்ள நிபந்தனைகளைப் பார்க்கும்போது, பெரும்பாலானோர் இந்தத் திட்டத்தின்கீழ் பயன் பெற முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், ஓய்வூதியதாரர்கள், தொழில் வரி செலுத்துவோர், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் பயன்பெறுவோர் என கணக்கெடுத்தாலே இரண்டு கோடி குடும்பங்களைத் தொடும் நிலையில், பயனாளிகள் யார் என்பதே புரியாத புதிராக உள்ளது.

 

மகளிர் உரிமைத் தொகையை யாருமே பெறக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவை இல்லை என்றாலும், அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த விதியின்மூலம், சில  இலட்சம் தி.மு.க.வினருக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகையை அளித்துவிட்டு, இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று மார்தட்டிக் கொள்ள தி.மு.க. அரசு முயலுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை இதுதான் திராவிட மாடல் ஆட்சி போலும்.

 

இந்தத் திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட ஒரு கோடி மகளிர் பயன் பெறுவர் என  முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பார்த்தால், ஒரு சில இலட்சம் மகளிர்கூட இத்திட்டத்தின்கீழ் பயன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகைக்கடன் போல இதுவும் ஒரு ஏமாற்று வேலை என்பதை மகளிர் புரிந்து கொண்டுவிட்டார்கள். "கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு” என்பதற்கேற்ப இது ஓர் ஏமாற்றுத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகை என்று அறிவித்ததற்கு ஏற்ப, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டுமென்பதே மகளிரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சொன்னதை செய்வோம் என்பதற்கேற்ப, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்