தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்க மாநிலத் தலைவர் இந்திரா தலைமையில், அச்சங்கத்தினர் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவிலியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈர்த்திட மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் அவர்கள் ‘சுகாதாரத் துறையில் பல மாதங்களாக காலியாக இருந்துவரும் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்; பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்தி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்;
ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்களில் மிகவும் நல்ல முறையில் பணி செய்துவரும் நிலையில் அவ்விடங்களில் செவிலியர்களை நிரப்புவதை உடனடியாக கைவிட வேண்டும்; தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட ஊழியர்களே அப்பணியை மேற்கொள்ள வேண்டும்; அதேபோல் ஒவ்வொரு துணை சுகாதார மையத்திற்கும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை நியமிக்க வேண்டும்; சுகாதார செவிலியர்களின் பணிச் சுமையைக் குறைக்க வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திவருகின்றனர்.