அண்ணா தொழிற்சங்கம் சார்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விருதுநகர் மண்டல அலுவலகம் முன்பாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 14-வது ஊதிய ஒப்பந்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்தும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு DA மற்றும் பணப்பலன்களை உடனடியாக வழங்கக் கோரியும், இதுநாள் வரையிலும் 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் என்பதை 4 ஆண்டுக்கு ஒப்பந்தம் என மாற்றியதைக் கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மைக் பிடித்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி “எழுதாத… மையே இல்லாத பேனா வைக்கிறதுக்கு ரூ.80 கோடியா?” எனக் கேள்வி எழுப்பி “விடியா திமுக அரசிடம் சம்பள உயர்வு கோரினால் பட்டை நாமம் சாத்துகிறது. இந்த நிலை மாறவேண்டுமென்றால், அதிமுக அரசு.. எடப்பாடியார் ஆட்சி வரவேண்டும். கோர்ட்ல இருந்து நல்ல தீர்ப்பு கிடைச்சிருக்கு. நான் இங்கே ஆர்ப்பாட்டத்துக்கு வந்த நேரம் நல்ல நேரம்னு சொன்னாங்க. இனி அதிமுகவுக்கு நல்ல நேரம்தான். பட்டாசு வெடிச்சு.. இனிப்புகளை வழங்கி சந்தோஷமாகக் கொண்டாடுவோம்.” என்று பேசிவிட்டு, அவரே நீளமான சரவெடியின் திரியைப் பற்ற வைத்து வெடிக்கச் செய்தார்.