தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (17/02/2022) மாலை 06.00 மணிக்கு நிறைவடைந்தது. மேலும், வெளிமாவட்டங்களில் இருந்து பிரச்சாரம் செய்வதற்காக வந்தவர்கள் உடனடியாக வெளியேறுமாறு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (19/02/2022) நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்து வருகிறது. அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடத்தும் வகையில், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் சுமார் 80,000- க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ருமேனியா நாட்டைச் சேர்ந்த நெகோய்டா ஸ்டீபன் மாரிஸ் (Negoita Stefan Marius) என்பவர் பிசினஸ் விசா மூலம் கோவை மாவட்டத்திற்கு வந்துள்ளார். நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிப்பதைப் பார்த்துள்ளார். அது குறித்து உள்ளூர் மக்களிடம் ஸ்டீபன் கேட்டறிந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு தெரிய வந்தது நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்பது. இதைக் கண்டு வியந்தவர், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த தி.மு.க.வினருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றும், பேருந்தில் ஏறியும் தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தார்.
இவரின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான காணொளி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சென்னையில் உள்ள இந்திய குடியேற்ற அலுவலகம் ஸ்டீபனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், விசா விதியை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக, சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அலுவலகத்தில் நாளை (18/02/2022) தகுந்த அசல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் யாராக இருந்தாலும், உள்நாட்டு சம்மந்தப்பட்ட நடவடிக்கைகளில் பங்கேற்கவோ, அது சார்ந்த விஷயங்களில் தலையிடவோ கூடாது. அதை மீறுவோருக்கு பிரிவு 14 வெளிநாட்டினர் சட்டம் 1946- ன் கீழ் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.