சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் இமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை என கருத்து தெரிவித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை எஃப்ஐஆர்-ல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என்பதால் எந்த கட்டணமும் வசூலிக்காமல் மாணவி படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும். எஃப்ஐஆர்-ஐ வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், செய்தியாளர் சந்திப்பை நடத்த சென்னை காவல்துறை ஆணையர் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை எனவே அவர் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் இருவர் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரிக்க இருக்கின்றனர். டெல்லியில் இருந்து தேசிய ஆணைய உறுப்பினர்கள் மம்தா குமாரி, பிரவின் ஷிவானிடே ஆகியோர் தமிழகம் வர இருக்கின்றனர். மகளிர் ஆணைய உறுப்பினர்கள் வருகை குறித்து தமிழக தலைமைச் செயலாளருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சியர், காவல்துறை தலைவர்,சென்னை காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.