சென்னை அடுத்த தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் உள்ள ரேடியல் சாலை பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 20 அடி ஆழத்தில் குழிகள் தோண்டப்பட்டு கான்கிரீட் பதிக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தோண்டி எடுக்கப்பட்ட குழியில் இன்று காலை கொல்கத்தாவைச் சேர்ந்த திரேஸ் சர்க்கார் என்ற கூலித் தொழிலாளி தவறி விழுந்துள்ளார். எப்பொழுதும் போல் பணிக்கு வந்த திரேஸ் சர்க்கார் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது மழை ஈரத்தில் குழியின் பக்கவாட்டு பகுதி சரிந்து தொழிலாளி உள்ளே விழுந்தார்.
அப்பொழுது அருகிலிருந்த கான்கிரீட் சுவர் மீது இருந்த கம்பியில் முகம் மோதி காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கான்கிரீட் தளத்திற்கு அருகில் உள்ள அந்த பள்ளத்தை உடனடியாக மூடி இருந்தால் இந்த விபத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிட்லபாக்கம் போலீசார் தொழிலாளி திரேஸின் உடலை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.