ரயிலில் முன்பதிவு இல்லா பெட்டியில் ஏற விடாமல் வடமாநில இளைஞர்கள் தடுத்ததாக கூறி ரயில்வே ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம் டவுன் ரவுண்ட் ரயில் நிலையத்தில் பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் ரயிலுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். ஆனால் ரயிலின் முன்பதிவு இல்லா பெட்டியில் இருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் பயணிகளை ஏறவிடாமல் வழியை அடைந்ததாகவும், மீறி ஏற முயன்றவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ரயில்நிலைய ஊழியர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டிக்கெட்டுக்கான முழு தொகையையும் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தி வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அதன்பிறகு 30 ரூபாய் பிடித்தம் போக மீதித் தொகையை பயணிகளிடம் திருப்பிக் கொடுத்தது ரயில்வே நிர்வாகம்.
அயோத்தியபட்டினம், ஆத்தூர் ரயில் நிலையங்களிலும் இதேநிலை ஏற்பட்டுள்ளது, அதனால் ரயில் நிலையங்களில் முறையான பாதுகாப்பை ஏற்படுத்த பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் கூறும்போது,
முன்பதிவு இல்லாத பெட்டியில் வடமாநில இளைஞர்கள் உள்ளே போக முடியாத அளவுக்கு கையை இறுக்க பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள். சிலர் மது அருந்தியும் இருக்கிறார்கள். டிக்கெட் எடுத்த ஒருவர் கூட அந்த ரயிலில் ஏற வில்லை அந்த அளவிற்கு அவர்கள் வழி விடாமல் தடுத்து நின்றுகொண்டனர் . ரயிலில் லக்கேஜ் வைக்கக் கூடிய இடங்களில் கூட அவர்கள் ஏறி படுத்து கொண்டனர். அரை மணி நேரம் தாமதம் ஆனாலும் ரயில் மெதுவாக கிளம்பிச் சென்றது. காத்திருந்த அத்தனை பயணிகளும் அவரவர் அவசரத்திற்காக செல்பவர்களே. முக்கியமாக மருத்துவ அறுவை சிகிச்சைக்காக வெளியூர் செல்பவர்கள் கூட இருந்தார்கள். ஒருவர் கூட அந்த ரயிலில் ஏற இயலவில்லை என வேதனையோடு கூறினார்.