நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதாகவும், அம்மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற மருத்துவர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு கரோனோ நோய்த்தொற்று ஏற்பட்டதால் தொடர்ந்து சிகிச்சையிலிருந்து வந்தார். இதனால் கடந்த 11ம் தேதி அவர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவில்லை.
தற்போது கரோனாவில் இருந்து முழுமையாக குணடைந்த அவர் திங்களன்று (மே 24) எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்றார். அவர் உள்பட மொத்தம் 9 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு காலத்தில் அரசின் உத்தரவு சரியாகப் பின்பற்றப்படுகிறதா போன்றவற்றை விறுவிறுவென்று ஆய்வு செய்யத் தொடங்கினார் அமைச்சர் மதிவேந்தன்.
இப்பணிகள் தொடர்பாகத் திங்களன்று (மே 24) மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட விருந்தினர் மாளிகையில் ஆய்வு நடத்தினார்.
இதையடுத்து அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியது, "நாமக்கல் மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக 2450 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1797 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 653 படுக்கைகள் காலியாக உள்ளன.
ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள் மொத்தம் 768 உள்ளன. இவற்றில் 21 படுக்கைகள் காலியாக இருக்கின்றன. அதேபோல இம்மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்லை" எனக் கூறினார்.