பேன்சி நம்பருக்கு லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இந்திரா நகரில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தில் ஓமலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளராக சிவக்குமார் பணியாற்றி வருகிறார். இவர் புதிய வாகனங்கள் பதிவு செய்தல், வாகன புதுபித்தல், வாகனம் தணிக்கை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக பல்வேறு புகார்கள் இருந்து வந்தன.
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கும் புகார்கள் வந்துள்ளன. மேலும், வாகன உரிமையாளர்களை மிரட்டி பணம் கேட்டு வந்ததாகவும், ஆளும் கட்சி அரசியல் பலம் இருப்பதாகவும் கூறி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது..
இந்தநிலையில் ஓமலூரை சேர்ந்த ஜாபர் சாதிக்அலி என்பவர் புதிதாக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த வாகனத்தை பதிவு செய்வதற்காக ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமாரிடம் தனது வாகனத்திற்கு சிறப்பு எண் வழங்க கேட்டபோது அரசு கட்டணத்தை விட கூடுதலாக 3800 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஜாபர் சாதிக்அலி இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் செய்தார்.
இந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலையில் இருந்து மாறு வேடத்தில் ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் காத்திருந்தனர். மேலும், ரசாயனம் தடவிய பணத்தையும் கொடுத்து அனுப்பினர்.
அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார், ஜாபர் சாதிக் அலியிடம் லஞ்சமாக 3800 ரூபாயை வாங்கி அவரது பாக்கெட்டில் வைத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்சம் வாங்கியது குறித்து விசாரணை நடத்தினர். இதுபோன்று எவ்வளவு பணம் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. இவர் பொறுப்பேற்றதில் இருந்து பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், தணிக்கை செய்த ஆவணங்கள் குறித்து ஆய்வுகள் செய்தனர்.
மேலும், அலுவலகத்தில் லஞ்ச பணம் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் சோதனைகள் செய்தனர். தொடர்ந்து முக்கிய ஆவணங்கள், கணினிகள் மற்றும் லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
கைது செய்யபட்ட சிவக்குமார் ஏற்கனவே விருதுநகர், கோவை ஆகிய இடங்களில் லஞ்சம் பெற்றதாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குரிபிடத்தகத்து. மேலும், ஓமலூரில் இருந்து இரண்டு முறை பணியிட மாற்றம் செய்த நிலையில் அங்கே செல்லாமல் தொடர்ந்து ஓமலூர் அலுவலகத்திற்கே பணியாற்ற மாறுதல் பெற்று வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
-பெ. சிவசுப்ரமணியன்