கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா அனல் மின் நிறுவனத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
இந்த நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாழை, கரிவெட்டி, தர்மநல்லூர், வளையமாதேவி, மும்முடிச்சோழகன், ஊ.அகரம் ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களை என்.எல்.சி நிர்வாகம் கைப்பற்றியுள்ளது. அதே சமயம் கையகப்படுத்திய நிலங்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட தொகையை மறைமுகமாக என்.எல்.சி நிறுவனம் வழங்குவதாகவும் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில், என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக வீடு, நிலம் கொடுத்தவர்கள், மந்தாரகுப்பத்தில் உள்ள நில எடுப்பு அலுவலகத்திற்குள் நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த அனைவருக்கும் சமமான தொகையை வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து நில எடுப்பு அலுவலர்கள், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதிய நில எடுப்பு சட்டத்தின்படி தங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை உள்ளிட்டவைகளை என்.எல்.சி நிர்வாகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.