Skip to main content

நிதின் கட்கரி கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

Published on 10/08/2018 | Edited on 10/08/2018

 

rs


மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது; இதை ஏற்க முடியாது என்கிறார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.  இது குறித்த அவரது அறிக்கை :

’’காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடனும், கர்நாடகத்துடனும் மத்திய அரசு பேச்சு நடத்தும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்திருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. காவிரி பிரச்சினையில் இரு தரப்புக்கும்  பொதுவானவராக இருக்க வேண்டிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது; இதை ஏற்க முடியாது.

 

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார்  நேற்று தில்லியில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மேகதாதுவின் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கர்நாடக அமைச்சரின் கோரிக்கையைக் கேட்ட நிதின்கட்கரி, இதுதொடர்பாக இரு மாநில பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசப்போவதாக உறுதியளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மேகதாது அணை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசப்போவதாக  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியிருக்கிறார். இவை இரண்டுமே மிகவும் ஆபத்தானவையாகும்.

 

மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களாக இருப்பவர்கள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில அமைச்சர்களையும் அழைத்துப் பேசுவது நியாயமானதாக இருக்காது. ஏனெனில், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய நீர்வள அமைச்சகம் நீதிபதி நிலையில் உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று நினைத்தால், அதற்கான அனுமதி கோரும் மனுவை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் கர்நாடகம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவுடன், மேகதாது அணை கட்டுவதற்கான தமிழகத்தின் ஒப்புதல் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருந்தால், அதை ஏற்று அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கலாம்; இல்லாவிட்டால் மனுவை திருப்பி அனுப்புவதைத் தவிர வேறு எதையும் மத்திய அரசு செய்ய முடியாது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு அனுமதி கொடுங்கள் என்று தமிழகத்திடம் கூறவோ அல்லது இதுதொடர்பாக இரு தரப்பையும் அழைத்துப் பேசவோ மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

 

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தினார். இதுதொடர்பாக அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு  தொடர்ச்சியாக கடிதங்களையும் எழுதினார். அவற்றுக்கு பதிலளித்து 09.06.2015 அன்று உமாபாரதி  எழுதிய கடிதத்தில் இதை தெளிவாக விளக்கியிருந்தார்.

 

‘‘மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.  சிவசமுத்திரம் நீர்மின்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் அனுப்பிய போது அதனுடன் தமிழகத்தின் அனுமதி இல்லாததால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. அதேபோல், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதி அளிக்காது’’  என்று உமாபாரதி கூறியிருந்தார். உமாபாரதியின் இந்த விளக்கம் அமைச்சர் கட்கரிக்கும் பொருந்தும்.

 

ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக இருப்பவர் நீதியின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஒரு தரப்பு கேட்டுக் கொண்டதற்காக இரண்டாம் தரப்பை அழைத்து நீதிபதி பேச்சு நடத்த முடியாது. அதேபோல் தான் மேகதாது அணை விவகாரத்தில் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய நிதின்கட்கரி, கர்நாடகத்தின் பக்கம் நின்று மேகதாது விவகாரத்தில் பஞ்சாயத்து பேச தமிழகத்தை அழைக்கக்கூடாது. அது அநீதி. கடந்த காலங்களில் தமிழகம் வறட்சியில் தவித்த போது, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்  என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும்படி கர்நாடகத்தை அறிவுறுத்தாத, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முன்வராத நிதின் கட்கரிக்கு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தை பேச்சுக்கு அழைக்க எந்த உரிமையும் இல்லை.

 

அதுமட்டுமின்றி,கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் 200 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்தால் தேக்கி வைக்க முடியும். இந்த அளவுக்கு கொள்ளளவு இருந்தால் காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரைக் கூட கர்நாடகம் தராது. மேகதாது அணை கட்டப்படுவது அனைத்து வழிகளிலும் தமிழகத்திற்கு ஆபத்தானது என்பதால் அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கான அழைப்பு,  ஒருவேளை முழு அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அதனிடமிருந்து வந்தால் தவிர, வேறு யாரிடமிருந்து வந்தாலும் அதை தமிழக அரசு ஏற்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
New information about the Bengaluru incident

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய இருவர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், சென்னையில் உள்ள பிரபல  வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷிமோகா ஐ.எஸ். மாடல் வழக்கில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.