சர்ச்சை வீடியோ ஒன்றால் உலகப் புகழ் பெற்றவர் நித்தியானந்தா. இதையடுத்து, மதுரை ஆதினத்துடன் ஏற்பட்ட தகராறு, பாலியல் பலாத்காரம், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளால், அவர் மீது குற்றச்சாட்டு கிராஃப் கிடுகிடுவென ஏறிக்கொண்டே போனது. இதன் தொடர்ச்சியாக, அகமதாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடிவந்தனர். இதனால், இந்தியாவை விட்டே தப்பியோடிய நித்தியானந்தா, ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள தீவில் அடைக்கலம் ஆனதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நித்தியானந்தாவுக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் மரணம் அடைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதைக் கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். அதனைத்தொடர்ந்து தான் உயிரிழக்கவில்லை சமாதி நிலையில் உள்ளதாகவும், திரும்ப வந்துவிட்டேன் எனவும் அவர் கைப்பட எழுதி வெளியான கடிதம் வைரலாகி இருந்தது. இந்நிலையில் நித்யானந்தா மீண்டும் திருவண்ணாமலை திரும்பப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் புதியதாக வெளியிட்டுள்ள பதிவில், நான் ஆழ்ந்த சமாதி நிலையில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், மீண்டும் உடலில் குடியேறி சத்சங்கங்களை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அவர் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வர இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் பவுர்ணமிக்கு முன் நித்தி திருவண்ணாமலை வருவார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை நித்தி இந்தியா வந்தால் அவர் கைது செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.