மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான புகாரில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.
வழக்கில் தொடர்புடையவர்கள் திங்கள்கிழமை ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருப்பசாமி, முருகன் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து அவருக்கான ஜாமீனை ரத்து செய்து, பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி பரிமளாதேவி வழக்கு விசாரணையை 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கடந்த முறை நிர்மலாதேவி விசாரணைக்கு வந்தபோது மொட்டையடித்தபடி வந்தார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.
நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது தொடர்பாக நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனை தொடர்பு கொண்டோம்.
நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லையே?
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னை திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். அதன் பிறகு அவரைத் தொடர்புகொள்ள வே முடியவில்லை.
தற்போது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும்போது ஆஜராவாரா? அதற்கு முன்பாகவே கோர்ட்டில் ஆஜராவாரா?
எதுவும் தெரியவில்லை. அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதைக் கூட தெரிவிக்க முடியவில்லை. எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.
மிரட்டுகிறார் என்று உங்களுக்கு போனில் தகவல் சொன்னதாக தெரிவிக்கிறீர்கள். எப்படி மிரட்டுகிறார்கள் என்று சொன்னாரா?
டூவீலரில் வேகமாக இருவர் வருவார்களாம். பக்கத்தில் வந்து உன் பிள்ளையை ஒன்றுமில்லாமல் பண்ணிடுவோம் என்பார்களாம். அமைச்சரின் ஆட்களாம். எந்த அமைச்சர்? அவர் பெயர் என்ன என்பதையெல்லாம் அவர் சொல்லவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டேன். சொல்லவில்லை. நிர்மலா தேவி இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. வழக்கறிஞர் என்ற முறையில் அவரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. கடத்தப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுகிறது. வேறு விதமான அச்சமும் ஏற்படுகிறது. இவ்வாறு கூறினார்.