விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.