
கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சார்ந்த தவறான நோக்கத்துடன் பேசியதால், வழக்கில் சிக்கி மதுரை சிறையில் அடைபட்டிருக்கிறார் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. கடந்தவாரம், சிபிசிஐடி போலீசாரால் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட அவரிடமிருந்து, தடயவியல் துறையில் உள்ள குரல் சோதனைப்பிரிவு, குரல் மாதிரிகளை எடுத்தது. பரிசோதனைக்குப் பிறகு, செல்போனில் பேசியது நிர்மலாதேவியின் குரல்தான் என்பதை, தடயவியல் துறை இன்று உறுதி செய்து, பரிசோதனை அறிக்கையை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்திருக்கிறது. இந்த அறிக்கையை சிபிசிஐடி போலீசார், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விரைவில் தாக்கல் செய்யவிருக்கின்றனர்.
ஆரம்பத்திலிருந்தே, “மாணவிகளிடம் பேசியது நான்தான். இது என்னுடைய குரலே.” என்று உண்மையைச் சொல்லி வந்தார் நிர்மலாதேவி. சிபிசிஐடி போலீசார் தரப்பிலும் “நிர்மலாதேவி முக்கியமான சில விஷயங்களை மறைத்திருக்கலாம். மற்றபடி, பொய் சொல்பவர் அல்ல. வழக்கு விசாரணையின்போது, யார் யாரிடமெல்லாம் தொடர்பு வைத்திருந்தேன் என்று, விரிவாகப் பேசி, போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அதிக ஒத்துழைப்பு தந்தார்.” என்கிறார்கள்.
தன்னுடைய குரல் என்று நிர்மலாதேவியே ஒத்துக்கொண்ட விஷயத்தைத்தான், சட்ட ரீதியாக குரல் மாதிரி எடுத்து, இப்போது உறுதி செய்திருக்கிறது தடயவியல் துறை.