தமிழகத்தில் சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ‘ஹிஸ்புத் உத் தஹீரிர்’ என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் சோதனை நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் உதவி புரிதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு வெளிவரும் எனத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே போன்று சென்னையில் தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள ஹமீத் அக்பர் அகமது என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்றது. மேலும் ஈரோட்டில் நடைபெற்ற சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்துவிட்டு கொளத்தூர் பகுதிக்கு விசாரணைக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த சோதனைகளில் பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் பலரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் குழந்தை அம்மாள் நகரில் என்.ஐ.ஏ. அமைப்பின் டி.எஸ்.பி. ராஜன் தலைமையில் ஒரு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். மானாந்துறையில் உள்ள ஷேக் அலாவுதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அமைப்பின் ஆய்வாளர் அருண் மகேஷ் தலைமையில் மற்றொரு குழுவினர் சோதனை நடத்தினர். அதே போன்று சாலியமங்கலத்தில் முஜிபூர் ரகுமான், அப்துல் காதர் இருவரின் வீட்டில் என்.ஐ.ஏ. அமைப்பின் ஏ.டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் மொத்தம் நான்கு குழுவினர் நான்கு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இன்று (30.06.2024) காலை 6:00 மணி முதல் 11 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் பென்டிரைவ், லேப்டாப், செல்போன், சிம்கார்டுகள் உட்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து முஜிபூர் ரகுமான் அப்துல் ரகுமான் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் உத் தஹீரிர் இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாகக் கூறி 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.