விருதுநகர் திருச்சுழியைச் சேர்ந்த நாராயண ஆதிமூலம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் ," திருச்சுழி அருகேயுள்ள சாமிநத்தம் கிராமத்தில் வசித்து வருகிறேன். நெய்வேலி அனல்மின் நிலையம் சார்பில் திருச்சுழி, பரட்டநத்தம், தம்மநாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய 4 கிராமங்களில் சூரிய மின் சக்தி தயாரிக்கும் நிலையம் அமைப்பதற்காக 1000 ஏக்கர் நிலத்தை வாங்கி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெய்வேலி அனல்மின் நிலையம், பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பகுதியை ஆக்கிரமித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் பலரிடம் முறையிட்டதோடு, போராட்டங்களை முன்னெடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த கிராமங்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களையும் நிலங்களை ஆக்கிரமிப்பதில் சேதப்படுத்தியுள்ளனர். கண்மாய் கரைகள், வழித்தடங்களை ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்களை பயன்படுத்தி தோண்டுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இந்த 4 கிராமங்களில் நெய்வேலி அனல் மின் நிலையம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பணிகளைத் தொடர இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவஞானம், நீதிபதி தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு, சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டனர். மேலும், இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர், நெய்வேலி அனல்மின் நிலைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.